ரவுடியை கொலை செய்து உடலை காட்டில் வீசிய ஏழு பேர் கைது
ரவுடியை கொலை செய்து உடலை காட்டில் வீசிய ஏழு பேர் கைது
ADDED : பிப் 06, 2025 02:33 AM

மூணாறு:கேரளாவில் தகராறில் பிரபல ரவுடியை கொலை செய்து உடலை காட்டில் வீசிய சம்பவத்தில் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா கோட்டயம் மாவட்டம் மேலக்காவு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சாஜன்சாமுவேல் 47. கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். அவர் கொலை செய்யப்பட்டு, உடலை பாயில் சுற்றி இடுக்கி மாவட்டம் மூலமற்றம் வாகமண் ரோடு பகுதியில் தேக்குமரக்காட்டில் வீசப்பட்டது.
இச்சம்பவத்தில் மூலமற்றத்தை சேர்ந்த அகில் 24, அஸ்வின் 23, மண்ணப்பாடியை சேர்ந்த ராகுல் 26, ஷரோன் 22, ஷிஜூ 29, ஆரக்குளத்தைச்சேர்ந்த பிரின்ஸ் 24, இப்பள்ளியைச் சேர்ந்த மனோஜ் 33, ஆகியோரை காஞ்சியாறு இன்ஸ்பெக்டர் ஷியாம்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்து தலைமறைவான ஆரக்குளத்தைச் சேர்ந்த விஷ்ணுவை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவர்கள் மேலக்காவு பகுதியில் தங்கி பெயின்டிங் பணி செய்து வந்தனர். அவர்களிடம் சாஜன்சாமுவேல் மது போதையில் தகராறு செய்து வந்தார். ஜன.30 இரவு தகராறு செய்தவரை வாயில் துணியை திணித்து கம்பியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை பாயில் சுற்றி ஆட்டோவில் கொண்டு சென்று தேக்கு மரக்காட்டில் வீசினர்.
கொலைக்கு பின் சாஜன்சாமுவேலின் ஒரு கை துாக்கிய நிலையில் இருந்ததால் வெட்டி அகற்றினர். கைதானவர்கள் திருட்டு, போதை பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றனர்.