ADDED : ஆக 17, 2025 11:30 PM

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள மச்சைல் மாதா கோவில் யாத்திரை நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, அருகேயுள்ள சிசோட்டி நகரில் ஏராளமான பக்தர்கள் கடந்த 14ல் குவிந்திருந்தனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதி கனமழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்கும் பணி நேற்று நான்காவது நாளாக நீடித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று அதிகாலை வரை கதுவா மாவட்டத்தில் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இதில், ஜோத் காதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
இதேபோல் ஜங்க்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். இது தவிர, ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக இங்குள்ள உதம்பூர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங், சமூக வலைதள பதிவில், 'மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம், தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சேதமடைந்து உள்ளது.
'இதையடுத்து, துணை ராணுவப்படையுடன் இணைந்து ராணுவமும் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளது.
'தொடர்ந்து இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மழையால் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளம், நிலச்சரிவில் பலியானவர்களுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் குணமடைய தேவையான உதவியை அரசு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.