சிக்கிமில் கடும் நிலச்சரிவு: சுற்றுலா பயணியர் தவிப்பு
சிக்கிமில் கடும் நிலச்சரிவு: சுற்றுலா பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 26, 2025 12:36 AM

காங்டாக்: சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், மாற்று பாதையில் தலைநகர் காங்டாகிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான லாச்சென் - சுங்தாங் சாலையில் உள்ள முன்ஷிதாங் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்வதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே உள்ள சுங்தாங் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவித்தன. இதில் பயணித்த 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், அங்குள்ள குருத்வாராவில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சுங்தாங்கில் இருந்து மங்கன் பகுதிக்கு அங்குள்ள பெய்லி பாலம் வாயிலாக, தலைநகர் காங்டாகிற்கு சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து, இப்பகுதியில் சுற்றுலா பயணியர் செல்ல, மாநில அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கள சூழலை ஆய்வு செய்தபின், அப்பகுதிகளில் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர் என, சிக்கிம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.