பாலியல் வழக்குகள்: 'பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடக்கூடாது'
பாலியல் வழக்குகள்: 'பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடக்கூடாது'
ADDED : ஜன 27, 2026 01:26 AM

புதுடில்லி: 'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் பெயர், தந்தை பெயர் அல்லது முகவரி போன்ற விபரங்களை, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் எந்தவொரு ஆவணத்திலோ அல்லது அறிக்கையிலோ குறிப்பிடக்கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், தன் தாயுடன் பழகிய ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 2021ல், மோதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்படி, 'போக்சோ' சட்டத்தின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
தள்ளுபடி
இந்த வழக்கில் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், 'தாயுடன் பழகியது பிடிக்காததால், என் மீது சிறுமி பொய் புகார் கூறி உள்ளார். 2021ல், கொரோனா தொற்று பரவிய நிலையில், குற்றம் நடந்திருக்க வாய்ப்பில்லை' என, அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா, ''கொரோனா காலத்தில் சம்பவம் நடந்தது என்பதற்காக, சிறுமியின் வாக்குமூலத்தை நம்பாமல் இருக்க முடியாது. 'சித்தப்பா' என, தான் அழைத்த நபரே வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறி உள்ளார். இதனால் ஜாமின் தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.
அப்போது, இந்த வழக்கில், விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா கவனித்தார்.
அறிவுறுத்தல்
இதன்பின், நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா பிறப்பித்த உத்தரவு: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் பெயர், தந்தை பெயர் அல்லது முகவரி போன்ற விபரங்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் எந்தவொரு ஆவணத்திலோ அல்லது அறிக்கையிலோ குறிப்பிடக்கூடாது.
இது தொடர்பாக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை டில்லி போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பின் நகல், டில்லி போலீஸ் கமிஷனருக்கு அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

