பலாத்காரத்துக்கு ஆளான பெண் நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார்
பலாத்காரத்துக்கு ஆளான பெண் நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார்
ADDED : பிப் 22, 2024 01:36 AM
அகர்தலா:திரிபுராவில் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண், தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் போது நீதிபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின், தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண், சமீபத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இது தொடர்பான வழக்கு தலாய் மாவட்டத்தில் உள்ள கமல்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி பலாத்கார சம்பவம் குறித்து கமல்பூர் நீதிபதியின் அறையில், வாக்குமூலம் பதிவு செய்த போது, நீதிபதி தன்னிடம் தவறாக நடந்ததாக இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து புகாருக்கு உள்ளான நீதிபதியை, அகர்தலா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்க உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இளம்பெண் புகார் குறித்து தலாய் எஸ்.பி., கூறியதாவது:
கமல்பூர் நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் பெறப்பட்டது. இதுவரை இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
புகாரின் தீவிரம் கருதி, இதை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண்ணின் கணவர், கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, புகார் குறித்து விசாரிக்க அம்பாசா மாவட்ட நீதிபதி கவுதம் சாகர் தலைமையில் மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது.