ADDED : பிப் 13, 2025 05:26 AM

கோட்டைகளுக்கு என்றே பெயர் பெற்ற மாவட்டம், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ளது.
பெங்களூரில் இருந்து 206 கி.மீ., தூரத்தில் உள்ளது சித்ரதுர்கா. இங்கு உள்ள சித்ரதுர்கா, யழுசுதின, சித்ரகலா, சீத்தல், கல்லின ஆகிய கோட்டைகள் மிகவும் பழமை வாய்ந்தவை. இதில் சித்ரதுர்கா கோட்டைக்கு தான் மவுசு அதிகம். ஏழு குவிந்த அரண்களை கொண்டு கம்பீரமாக திகழ்கிறது. இந்த கோட்டை சமகால போர் நுட்பங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவின் வீரம் நிறைந்த நாயக்கர்களின் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த கோட்டை திகழ்கிறது. கோட்டையில் 19 பிரதான நுழைவுவாயில்கள், 38 சிறிய துளைகள், நான்கு ரகசிய நுழைவுவாயில்கள் உள்ளன.
மேலும் கோட்டைக்குள் ஏகநாதேஸ்வரி, ஹிடிம்பேஸ்வரி, சம்பிகே சைதேஸ்வரா, பால்குனேஸ்வரா உட்பட 14 கோவில்கள் உள்ளன. அங்கு உள்ள பழங்கால தானிய கிடங்கு, எண்ணெய் தொட்டிகள், உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு கோபுரங்கள், துப்பாக்கி துளைகள், நினைவு சின்னங்கள் சுற்றுலா பயணியரின் ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது.
இதுபோல மற்ற கோட்டைகளுக்கும் தனி தனி சிறப்பு உள்ளது. கோட்டைகள் மட்டுமின்றி சந்திரவள்ளி, அங்காளி மடம், ஆடு மல்லேஸ்வரா வனவிலங்கு பூங்கா, வாணி விலாஸ் சாகர், காயத்ரி ஜலாஷியா, தொட்டதரங்கப்பா மலை உட்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் நிறைந்து உள்ளன.
பெங்களூரில் இருந்து ஒரு நாள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் சித்ரதுர்காவில் உள்ள சுற்றுலா தலங்கள் உள்ளன. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சித்ரதுர்காவுக்கு அடிக்கடி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்களில் நாம் நினைக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம். பெங்களூரில் இருந்து ரயில் சேவையும் உள்ளது.
--- -நமது நிருபர் -

