'ஷிர பாக்யா' பால் பவுடர் விற்பனை 127 தலைமை ஆசிரியர்களுக்கு 'சம்மன்'
'ஷிர பாக்யா' பால் பவுடர் விற்பனை 127 தலைமை ஆசிரியர்களுக்கு 'சம்மன்'
ADDED : டிச 01, 2024 11:16 PM

பாகல்கோட்: பள்ளி சிறார்களுக்கு, 'ஷிர பாக்யா' திட்டத்தின் அளிக்கப்படும் பால் பவுடரை சட்டவிரோதமாக விற்றது தொடர்பாக, பாகல்கோட்டின் 127 தலைமை ஆசிரியர்களுக்கு, போலீசார் 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.
பாகல்கோட்டின், சூலகேரி கிராமத்தில் உள்ள தனியார் குடோனில், ஷிர பாக்யா திட்டத்தின் பால் பவுடர் பதுக்கி வைக்கப்பட்டதாக போலீசாருக்கு, சமீபத்தில் தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், 44.7 குவிண்டால் பால் பவுடரை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாயாகும்.
இது தொடர்பாக, சித்தப்பா உக்கலி என்பவரை கைது செய்தனர். இவர் பாகல்கோட்டின் சில தாலுகாக்களில், பள்ளிகளுக்கு பால் பவுடர் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரரிடம், உள் ஒப்பந்தம் பெற்றிருந்தார்.
பள்ளிகளுக்கு பால் பவுடரை சப்ளை செய்த பின், அங்கிருந்தே கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் கொடுத்து, பால் பவுடரை திரும்ப வாங்கியுள்ளார். அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது, விசாரணையில் தெரியவந்தது. வெளி மார்க்கெட்டில், பால் பவுடரின் விலை, கிலோவுக்கு 340 முதல் 400 ரூபாய் வரை உள்ளது.
இவர் எந்தெந்த பள்ளிகளிடம், பால் பவுடர் வாங்கினார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். வெவ்வேறு பள்ளிகளின், 127 தலைமை ஆசிரியர்களுக்கு, சம்மன் அனுப்பிய போலீசார், ஷிர பாக்யா திட்டத்தின் முழுமையான விபரங்களுடன், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ - மாணவியரும் பால் குடிப்பதில்லை.
ஆனால், மாணவ - மாணவியரின் கணக்கை குறிப்பிடும் போது, அனைவரும் பால் குடித்ததாக கணக்கு காட்டுகின்றனர். ஒரு மாணவருக்கு பால் தயரிக்க பயன்படுத்த வேண்டிய பால் பவுடரின் அளவை குறைத்து, அதிக தண்ணீர் சேர்த்து கொடுக்கின்றனர்.
பள்ளிகளில் இது போன்று பால் பவுடரை மிச்சப்படுத்தி, வெளி மார்க்கெட்டில் விற்று பணமாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நல்ல நோக்கில், மாநில அரசு ஷிர பாக்யா திட்டத்தை செயல்படுத்தியது. வாரத்தில் ஆறு நாட்கள் பால் வழங்குகிறது. இதில் மோசடி செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.