ADDED : ஜன 22, 2024 03:21 AM

விஜயவாடா : ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் காங்., முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன். ஜெகனின் சகோதரி ஷர்மிளா.
இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். இதை கலைத்துவிட்டு சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார்.
இதையடுத்து ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்., தலைவராக கட்சி தலைமை நியமித்தது. இந்நிலையில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஷர்மிளா காங்., மாநில தலைவராக பதவியேற்றார்.
இதன்பின் ஷர்மிளா பேசியதாவது:
ராஜசேகர ரெட்டி இரண்டு முறை காங்., மாநில தலைவராகவும், முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். மீண்டும் அவரது மகள் ஷர்மிளாவான என்னை நம்பி, கட்சி தலைமை பொறுப்பை வழங்கியுள்ளது.
அவர்களது நம்பிக்கையை பூர்த்தி செய்வேன். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அதற்கு முந்தைய தெலுங்கு தேசத்தின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
இந்த இரு ஆட்சிகளும் ஆந்திராவை 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளியுள்ளன.
தற்போது ஆட்சியில் உள்ள ஜெகன் ஆட்சியில் சாலை அமைப்பதற்கோ, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதியில்லை. மாநிலத்தில் ஒரு நகரத்தில் கூட மெட்ரோ ரயில் வசதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.