பங்கு சந்தையில் கடும் சரிவு; 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
பங்கு சந்தையில் கடும் சரிவு; 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ADDED : நவ 05, 2024 02:01 AM
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று கண்ட பெரும் சரிவால், முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு, பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் உயர்வு கண்டன.
ஆனால், நேற்றைய வர்த்தக துவக்கத்தில், பெரும் வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளும்; நிப்டி 500 புள்ளிகளும் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தந்தன.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பங்குகளை முதலீட்டாளர்கள் அவசரமாக விற்றதால், சந்தைகள் ஒரு சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டன.
மிட் கேப், ஸ்மால் கேப் எனப்படும் நடுத்தர மற்றும் சிறுநிறுவன பங்குகளின் விலை, 2 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டன.
நண்பகலுக்கு பிறகு, விலை குறைந்திருந்த பங்குகள் ஓரளவு வாங்கப்பட்டதால், சந்தைகளின் சரிவு கட்டுப்படுத்தப்பட்டு, நிலைமை சற்று மீண்டது.
முடிவில் சென்செக்ஸ் 942 புள்ளிகள் சரிவுடன், 78,782 புள்ளிகளிலும்; நிப்டி 309 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 23,995 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
காரணம் என்ன?
1 அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையேயான கடும் போட்டி காரணமாக நிலவும் நிச்சயமற்ற தன்மை
2செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், இந்திய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் மிகவும் பலவீனமாக இருப்பது
3அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடனுக்கான வட்டியை மேலும் 0.25 சதவீதம் குறைக்கக்கூடும் என்ற கணிப்பு பொய்க்கலாம் என்ற தகவல்
4உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருவது
5சீனாவில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்பதால், முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் எச்சரிக்கை காப்பது.
மும்பை பங்குச் சந்தை பங்கு மதிப்பு, 448 லட்சம் கோடியில் இருந்து, 442 லட்சம் கோடியாக சரிந்தது
கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு, பங்குச் சந்தைகள் கண்ட பெரும் சரிவு இது
தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' 24,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது, முதலீட்டாளர்களை மிரளச் செய்தது
அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபரில் 90,000 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர்.