படிக்கட்டில் தவறி விழுந்த சசி தரூருக்கு காலில் முறிவு
படிக்கட்டில் தவறி விழுந்த சசி தரூருக்கு காலில் முறிவு
ADDED : பிப் 06, 2026 12:58 AM

புதுடில்லி: பார்லி., வளாகத்தில் படிக்கட்டுகளில் இறங்கும் போது தவறி விழுந்த காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் லோக்சபாவில் அலுவல்கள் முடங்கின.
சபையில் இருந்து நேற்று முன்தினம் வெளியே வந்த கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யான சசி தரூர், 69, பட்டிக்கட்டுகளில் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார்.
உடனே, அருகிலிருந்த சமாஜ்வாதி தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சில எம்.பி.,க்கள், அவரை பத்திரமாக துாக்கினர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் சசி தரூர் அலுவலகம் நேற்று வெளியிட்ட பதிவில், 'எக்ஸ்-ரே பரிசோதனையில், சசி தரூருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. சக்கர நாற்காலியை பயன்படுத்தி பார்லி., நடவடிக்கைகளில் அவர் பங்கேற்பார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதை சசி தரூர் தவிர்க்கவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சபைக்கு நேற்று வந்த அவர், கூட்டத் தொடர் முடிந்ததும் சக்கர நாற்காலியிலேயே வெளியேறினார்.

