போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்கிறார் சசி தரூர்
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்கிறார் சசி தரூர்
ADDED : மே 13, 2025 04:26 AM

புதுடில்லி : 'இந்தியா - -பாக்., இடையிலான போர் நிறுத்த முடிவு, மூன்றாவது நாட்டுக்கு எப்படி தெரிந்தது' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் -எம்.பி., சசி தரூர் கூறியதாவது:
சர்வதேச துாதரக நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போன்ற எதையும் எப்போதுமே நான் பார்த்ததில்லை.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல். போர் பதற்றம் துவங்கியதுமே இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தீவிரமாக பேசி வந்தனர்.
மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் பேசினர். அதை, மத்தியஸ்துக்கான கோரிக்கையாக கருத முடியாது. நாடுகளுக்கு இடையேயான துாதரக தொடர்புகளானது, ஒருபோதும் மத்தியஸ்த வேண்டுகோள் கிடையாது.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இருவரும் பேசினர்.
பின், பாக்., வெளியுறவு அமைச்சருடன் ரூபியோ பேசினார். மோதல் நடந்த அனைத்து நாட்களிலும் இது திரும்பத் திரும்பத் தொடர்ந்தது.
அதற்காக, அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்யும்படி இந்தியா கோரியதாக அர்த்தம் கிடையாது. நம் நாடு, எப்போதுமே நீண்டகால போரை விரும்பவில்லை. பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க மட்டுமே விரும்பியது; பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
போர் நிறுத்தம் விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டதாக காங்., கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.