ADDED : பிப் 08, 2025 09:23 PM

கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது பல்லாரி மாவட்டம். கனிம சுரங்க தொழிலுக்க பெயர் பெற்ற இந்த மாவட்டம், வறட்சிக்கும் பெயர் போனது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானோர் பிழைப்புக்காக பெங்களூரு வருகின்றனர். ஆனால் பல்லாரி வாலிபர், செம்மறியாடு வளர்ப்பில் வெற்றி கண்டு சொந்த ஊரில் சாதித்து வருகிறார்.
பல்லாரியின் சண்டூர் தாலுகா நிடுகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் ஒபலேஷ், 30. பத்தாம் வகுப்பு மட்டும் படித்து உள்ளார். முதலில் இவரும் கூலி வேலைக்காக பெங்களூரு சென்றார். ஆனாலும் அவரால் குடும்ப வறுமையை போக்க முடியவில்லை. இதனால் சொந்தமாக ஏதாவது சிறு தொழில் செய்யலாம் என்று நினைத்தார். மளிகை கடை வைத்து நடத்தினார்.
அப்போது அவரது நண்பர் மூலம் நரேகா திட்டம் பற்றி தெரிந்தது. அந்த திட்டத்தின் கீழ் 70,000 ரூபாய் உதவி தொகை பெற்றார். மேலும் வங்கியில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொட்டகை கட்டி, 40 செம்மறியாடுகளை வாங்கினார். ஆடுகளை நான்கு பராமரித்து வந்ததால் திடகாத்திரமாக வளர்ந்தன.
செம்மறியாடு தோல்களில் தயாரிக்கப்படும் போர்வைக்கு அதிக மவுசு உண்டு என்பதால், செம்மறியாடுகளை விற்பனை செய்து வந்தார். நல்ல லாபம் கிடைத்ததால் கூடுதலாக 50 செம்மறியாடுகளை வாங்கி தற்போது வளர்க்கிறார்.
ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி தவிடு; ஒரு நாளைக்கு மூன்று முறை வைக்கோல், சோயாபீன் உணவு, மக்காசோளம் உணவாக கொடுக்கப்படுகிறது. தற்போது ஆடுகள் விற்பனையின் மூலம் மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.
நரேகா திட்டத்தை பயன்படுத்தி வேலையில்லாதவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஒபலேஷ் கூறுகிறார். அவரை கவுரவித்த பஞ்சாய
த்து நிர்வாகம், அனைவரும் முன்மாதிரியாக ஒபலேஷ் விளங்குவதாக பாராட்டி உள்ளது.
- நமது நிருபர் -

