'மனித டெலிபிராம்ப்டர்' பயன்படுத்திய ஷிண்டே? காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலால் பரபரப்பு
'மனித டெலிபிராம்ப்டர்' பயன்படுத்திய ஷிண்டே? காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலால் பரபரப்பு
ADDED : நவ 11, 2024 06:13 AM

மும்பை : உலகிலேயே முதன்முறையாக, 'மனித டெலிபிராம்ப்டரை' பயன்படுத்தியவர், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தான் என, காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்துஉள்ளனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், வரும், 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தாராஷிவ் மாவட்டத்தின் பரண்டா சட்டசபை தொகுதியில், சிவனேசா வேட்பாளர் தானாஜி சாவந்தை ஆதரித்து, அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, அருகில் நின்றிருந்த தானாஜி சாவந்த் கூறியதை, அப்படியே ஏக்நாத் ஷிண்டே பேசினார். இதை கிண்டலடித்து, சமூக வலைதளத்தில் காங்., வெளியிட்ட பதிவு:
மேடையில் சரளமாக பேசத் தெரியாத அரசியல் தலைவர்கள், 'டெலிபிராம்ப்டர்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேடையில் பேசும்போது, எதிரில் உள்ள திரையில் ஒளிரும் எழுத்துக்களை பார்த்து படிப்பது தான், இந்த டெலிபிராம்ப்டர் முறை. சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது இயங்குவது இல்லை; இது, டெலிபிராம்ப்டரை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும்.
உஷாரான முதல்வர் ஏக்நாத், அருகில் ஒருவரை நிற்க வைத்து, அவர் பேசுவதை மைக் முன் திரும்ப ஒப்பித்துள்ளார். இதன் வாயிலாக உலகிலேயே மனித டெலிபிராம்ப்டரை பயன்படுத்திய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.