கப்பல் போக்குவரத்து மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
கப்பல் போக்குவரத்து மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
ADDED : ஆக 08, 2025 03:29 AM

புதுடில்லி: இந்திய கடற்கரையில் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா - 2025, பார்லி.,யில் நேற்று நிறைவேறியது.
கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா - 2025, செலவு குறைந்த, நம்பகமான மற்றும் நிலையான போக்குவரத்து முறையை ஊக்குவிக்கிறது. கடலோர வர்த்தகத்திற்கான ஒரு பிரத்யேக சட்ட கட்டமைப்பை இது வழங்குகிறது. மேலும், வெளிநாட்டு கப்பல்களில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வழிவகை செய்கிறது.
ராஜ்யசபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான சர்பானந்த சோனேவால் பேசுகையில், ''2030க்குள் நாட்டின் கடலோர சரக்கு வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும். உலகில் தற்போதுள்ள வணிக நடைமுறைகளுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் மசோதா உள்ளது,'' என்றார்.
இதன்பின், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.