சிவசேனா நிர்வாகியை சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,: போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்
சிவசேனா நிர்வாகியை சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,: போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்
ADDED : பிப் 04, 2024 01:38 AM

தானே: மஹாராஷ்டிராவில், கூட்டணியில் உள்ள சிவசேனா நிர்வாகியை போலீசார் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட் நேற்று கைது செய்யப்பட்டார். 'பாலிவுட்' சினிமா காட்சி போல போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அரங்கேறிய இந்த சம்பவம், சிவசேனா - பா.ஜ., தலைவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கல்யாண் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பா.ஜ.,வைச் சேர்ந்த கண்பத் கெய்க்வாட் என்பவர் உள்ளார்.
இவருக்கும், ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளரான மகேஷ் கெய்க்வாட் என்பவருக்கும் நிலம் வாங்குதல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
கண்பத் கெய்க்வாடுக்கு சொந்தமான நிலத்தை மகேஷ் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக புகார் அளிக்க உல்லாஸ் நகரில் உள்ள ஹில்லைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கண்பத்தின் மகன் நேற்று முன்தினம் இரவு சென்றார்.
எதிர்தரப்பைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் அங்கு சென்றனர்.
தகவலறிந்து பா.ஜ., - எம்.எல்.ஏ-., கண்பத் கெய்க்வாடும் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
இருவருக்கும் இடையிலான பிரச்னை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்து கொண்டிருந்த போது, திடீரென ஆவேசமடைந்த கண்பத் கெய்வாட், தன் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
ஐந்திற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பாய்ந்ததில், மகேஷ் கெய்க்வாடுக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சிவசேனா எம்.எல்.ஏ., ராகுல் பாட்டீலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் போலீசாரின் முன்னிலையிலேயே மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது.
உடனடியாக படுகாயமடைந்த மகேஷ் மற்றும் ராகுல் ஆகியோர் கல்யாணில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மகேஷ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய கண்பத் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றச்சாட்டு
அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மூவரையும் வரும் 14ம் தேதி வரை காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைதுக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு குறித்து கண்பத் கெய்க்வாட் கூறுகையில், ''போலீஸ் ஸ்டேஷனில் என் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் நான் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டேன். ஒரு தந்தையாக நான் எந்த தவறும் செய்யவில்லை.
''மஹாராஷ்டிராவில் குற்றவாளிகள் ராஜ்ஜியத்தை நிறுவ முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முயல்கிறார்,'' என குற்றஞ்சாட்டினார்.
சிவசேனா நிர்வாகிகளும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி கட்சி நிர்வாகியை பா.ஜ., - எம்.எல்.ஏ-., துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மஹாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.