ADDED : பிப் 04, 2025 06:48 AM

பாகல்கோட் மாவட்டம், மஹாகூட்டாவில் அமைந்து உள்ளது, மஹாகுடேஸ்வரர் கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், 6 - 8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு பல சிவன் சிலைகள் இருப்பதால், 'மஹாகூட்டா குழு' என்று அழைக்கப்படுகிறது.
சாளுக்கியர் வம்சத்தின் முதலாம் புலிகேசியால் கட்டப்பட்ட இக்கோவிலில் பல்வேறு வரலாற்று கல்வெட்டுகள் உள்ளன. அதில் இடம், மதத்தின் வரலாற்றை குறிப்பிடுகின்றன. பட்டதகல், ஐஹோலே, பாதாமியில் காணப்படும் சாளுக்கிய கட்டட கலையில், இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்களுக்கு இக்கோவில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக, கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு முக்கிய கல்வெட்டுகளாகும். துாண், தாழ்வார கல்வெட்டுகள், சாளுக்கிய வம்சத்தின் வரலாற்றை சித்தரிக்கின்றன.
துாண் கல்வெட்டில், தர்மவிஜய ஸ்தம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சாளுக்கியர்களின் சாதனைகள், அவர்களின் ராணுவ பயணங்கள் பற்றிய விபரங்கள் பதிவாகி உள்ளன.
தாழ்வார கல்வெட்டில், கோவிலின் சுவாமிக்கு வெள்ளிக்குடை, மாணிக்கங்கள் வழங்கப்பட்டதை பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளன.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில், 'மஹாகுடேஸ்வரர் கோவில்' மிகவும் முக்கியமானது. திராவிட பாணியில் கட்டப்பட்ட இக்கோவிலில் வளைந்த கோபுரத்தின் மேல், சிவலிங்கம் உள்ளது. சுவர்களில் சிவபெருமானின் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, இங்கு இயற்கை நீர் ஊற்றும் உள்ளது.
இது, விஷ்ணு புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தின் நீரில் குளித்தால், உங்களின் பாவங்கள் போகும் என்று நம்பப்படுகிறது. இதற்கு எதிரில் மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது.
- நமது நிருபர் -