சிவாஜி சிலை விவகாரம்; தலைமறைவு பொறியாளர் கைது: சட்டத்தை கையில் எடுத்த மஹா., அரசு
சிவாஜி சிலை விவகாரம்; தலைமறைவு பொறியாளர் கைது: சட்டத்தை கையில் எடுத்த மஹா., அரசு
ADDED : ஆக 30, 2024 11:21 AM

மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கிய சம்பவத்தில் அதை வடிவமைத்த பொறியாளரை மஹாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்தன.
சிவாஜி சிலை உடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்று அறிவித்து இருந்தார்.
இந் நிலையில், சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலை உடைந்து விவகாரம் பெரியதாக மாறிய சமயத்தில் பல நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலை உடைந்த விவகாரத்தில் இது தான் முதல் கைது நடவடிக்கை ஆகும்.
இதே சம்பவத்தில் தேடப்பட்டு வரும் சிற்பி ஜெய்தீப் ஆப்தே இன்னமும் போலீசார் பிடியில் சிக்கவில்லை. அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் அவரை பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறி இருக்கின்றனர்.