ஜன.6ல் டி.கே. சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு: கொளுத்தி போட்ட காங். எம்எல்ஏ
ஜன.6ல் டி.கே. சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு: கொளுத்தி போட்ட காங். எம்எல்ஏ
ADDED : டிச 13, 2025 06:41 PM

பெங்களூரு: கர்நாடகாவின் முதல்வராக டி.கே. சிவகுமார் ஜன.6ம் தேதி பதவியேற்பார் என்று காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் ஹூசைன் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் 2023ம் ஆண்டு முதல் காங்கிரசின் சித்தராமையா முதல்வராக உள்ளார். கிட்டத்தட்ட முதல்வர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், டி.கே. சிவகுமாரை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
பதவிக்கான இந்த மோதல், அம்மாநில அரசியலில் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும் உற்று கவனிக்கப்பட்டது. காங்கிரஸ் டில்லி தலைமையின் சமரச பேச்சைத் தொடர்ந்து, சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் பரஸ்பரம் விருந்தளித்து தங்களின் ஒற்றுமையை பறைசாற்றினர். இதையடுத்து, இருவர் இடையேயும், அவர்களின் ஆதரவாளர்கள் இடையேயுமான சண்டை சற்றே ஓய்ந்திருந்தது.
இந் நிலையில், முதல்வர் பதவி சண்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதாக அங்கு நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. ஜன.6ம் தேதி டி.கே. சிவகுமார் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்கிறார் என்று ராமநகரா எம்எல்ஏ இக்பால் ஹூசைன் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; வரும் ஜன. 6ம் தேதி 99 சதவீதம் கர்நாடகாவின் முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதையே தான் சொல்கின்றனர். ஜன. 6 அல்லது ஜன.9 இந்த இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றில் அவரின் பதவியேற்பு நடைபெறும்.
இவ்வாறு இக்பால் ஹூசைன் கூறினார்.

