பழங்கால கோவிலில் சிவலிங்கம் திருட்டு: ஒரே குடும்பத்தில் 8 பேர் கைது
பழங்கால கோவிலில் சிவலிங்கம் திருட்டு: ஒரே குடும்பத்தில் 8 பேர் கைது
ADDED : மார் 01, 2025 10:31 PM

ஆமதாபாத்: துவாரகாவில் உள்ள பழங்கால பீத்பஞ்சவ் மகாதேவ் கோவிலில் இருந்த சிவலிங்கத்தை திட்டமிட்டு திருடிய ஒரே குடும்பத்தினரை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடும்பத்தில் ஒரு பெண் கனவு கண்டதை அடுத்து, பிப்ரவரி 26 அன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து ஒரு சிவலிங்கத்தைத் திருடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு சம்பவம் குறித்து துவாரகா எஸ்.பி நிதிஷ் பாண்டே கூறியதாவது:
குஜராத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், கனவில் கண்ட லிங்கத்தை வீட்டிற்கு எடுத்துவந்து பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தனர்.
துவாரகாவிற்கு 500 கி.மீ., பயணம் செய்து பல நாட்கள் அங்கேயே தங்கி திட்டம் தீட்டியுள்ளனர்.
துவாரகாவில் உள்ள ஹர்ஷத்தின் பழங்கால பீத்பஞ்சன் மகாதேவ் கோவிலில் இருந்து சிவலிங்கம் திருடப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் அது கடலில் வீசப்பட்டதாக சந்தேகித்தோம். இருப்பினும், துவாரகாவிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அதைத் திருடியது பின்னர் தான் கண்டுபிடித்தோம்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு கனவில், பீத்பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்து அதை பிரதிஷ்டை செய்வது அவர்களின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வந்து செழிப்பைத் தரும் என்று நம்பி உள்ளனர்.
மகேந்திர மக்வானாவின் மருமகள் கனவு கண்டது தான் குடும்பத்தை சிவலிங்கத்தைத் திருடத் தூண்டியது. திருட்டைச் செய்ய, ஏழு முதல் எட்டு குடும்ப உறுப்பினர்கள் துவாரகாவுக்குச் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கினர். அவர்கள் கோவிலில் ஒரு ஒத்திகை நடத்தி, சிவலிங்கத்தைத் திருடிய பிறகு, வீடு திரும்பி மகாசிவராத்திரி அன்று அதை தங்கள் வீட்டில் நிறுவினர்.
குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்து அதைச் செயல்படுத்தினர்.மகேந்திராவைத் தவிர, குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், வன்ராஜ், மனோஜ் மற்றும் ஜகத் என அடையாளம் காணப்பட்ட மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட சிவலிங்கம் போலீசாரால் மீட்கப்பட்டு துவாரகாவில் உள்ள கோவிலில் மீண்டும் நிறுவப்பட்டது.
இவ்வாறு நிதிஷ் பாண்டே கூறினார்.