19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்டில் மலைவாழ் பகுதியின் ஷிவமொக்கா மாணவர்
19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்டில் மலைவாழ் பகுதியின் ஷிவமொக்கா மாணவர்
ADDED : நவ 22, 2024 07:21 AM

கர்நாடக மாநிலத்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில், மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர் தேர்வாகி உள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம், ஹரிகேயை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிவகுமார் - நாகரத்னா. இவர்களின் மகன் லோஹித், 17. தற்போது நகரில் உள்ள ஷிவமொக்கா டி.வி.எஸ்., - பி.யு., கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்துள்ளது. இதை பார்த்த அவரது பெற்றோர், ஷிவமொக்கா நகரில் உள்ள சஹயாத்ரி கிரிக்கெட் அகாடமியில், 5 வயதில் லோஹித்தை சேர்த்தனர். அன்று முதல் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்.
மண்டல அளவில், 14, 16, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மண்டல கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். மாநில அளவிலான உள் மண்டல விளையாட்டு போட்டிகளில், விளையாடிய ஏழு போட்டிகளில், 25 விக்கெட்களை வீழ்த்தி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
அதுமட்டுமின்றி, பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன் பலனாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, வினோத் மன்கத் டிராபியில் விளையாட, கர்நாடகா அணியில் லோஹித் இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து சஹயாத்ரி கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர் நாகராஜ் கூறியதாவது:
லோஹித் சிறந்த விளையாட்டு வீரர். எங்கள் அகாடமியில் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்ற வீரர்கள், மாநில, தேசிய அளவில் தேர்வாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இன்னும் சாதிக்க வேண்டும். இவரை போன்று, எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்ற அதிதி, தற்போது இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -