முடா ஆவணங்களை எரித்துள்ளார் பைரதி சுரேஷ் மீது ஷோபா பாய்ச்சல்
முடா ஆவணங்களை எரித்துள்ளார் பைரதி சுரேஷ் மீது ஷோபா பாய்ச்சல்
ADDED : அக் 19, 2024 11:11 PM

பெங்களூரு: ''முடா முறைகேடு தொடர்பான ஆவணங்களை, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் எரித்துள்ளார். விசாரணை அமைப்புகள் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ஷோபா வலியுறுத்தினார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
முடா முறைகேடு வழக்கில், முதல்வரை காப்பாற்றும் நோக்கில், அமைச்சர் பைரதி சுரேஷ் முடா ஆவணங்களை, பெங்களூருக்கு கொண்டு வந்து எரித்துள்ளார். இது குறித்து எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அவரை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
அவரிடம் தீவிரமாக விசாரித்தால் அனைத்து தகவல்களும் வெளியே வரும். முடா கோப்புகள் எங்கு போயின; எங்கு வைத்து ஆவணங்களை எரித்தார் என்ற தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.
விவேகானந்தா என்பவரை, டர்ப் கிளப்பில் உறுப்பினராக்க, முதல்வர் சித்தராமையா 1.30 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். காசோலை மூலமாக அவர் பணம் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக, போலீசார் 'பி' ரிப்போர்ட் தாக்கல் செய்திருந்தனர். இதை நீதிமன்றம் கண்டித்தது. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
முடா மட்டுமல்ல, டர்ப் கிளக் உறுப்பினராக்க லஞ்சம் பெற்றது குறித்தும் விசாரணை நடக்க வேண்டும். மற்றவரை பற்றி பேசும் சித்தராமையா, குற்றவாளி இடத்தில் நிற்கிறார். அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட முடியாதவன், மேடை சரியில்லை என, கூறுவது போன்று மத்திய அமைச்சர் ஷோபா பேசுகிறார். அவருக்கு சரியான தகவல் தெரியாததால், முடா ஆவணங்களை எரித்ததாக அமைச்சர் பைரதி சுரேஷ் மீது குற்றஞ்சாட்டுகிறார். அவர் ஆவணங்களை கொண்டு வந்ததாக, கூறுவதே பொய். ஷோபா எப்போதும் எரியும் தீயில், எண்ணெய் ஊற்றுவார். பெண் என்பதால் அவர் மீது, எனக்கு மதிப்புள்ளது.
- லட்சுமி ஹெப்பால்கர்,
அமைச்சர், மகளிர், குழந்தைகள் நலத்துறை