பா.ஜ., அரசுக்கு அதிர்ச்சி: அமைச்சரை வீழ்த்திய காங்., வேட்பாளர்: ராஜஸ்தான் தேர்தல்
பா.ஜ., அரசுக்கு அதிர்ச்சி: அமைச்சரை வீழ்த்திய காங்., வேட்பாளர்: ராஜஸ்தான் தேர்தல்
ADDED : ஜன 08, 2024 11:57 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரன்பூர் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில், ஆளுங்கட்சியின் அமைச்சராக உள்ள பா.ஜ.,வின் சுரேந்திர பால் சிங்கை, 11,283 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் தோற்கடித்தார்.
ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கான சட்ட சபை தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெறுவதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட குர்மீத் சிங் கூனார் காலமானார்.
இதையடுத்து, அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற, 199 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 25ல் சட்டசபை தேர்தல் நடந்தது.
இதில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், 69 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சியான பா.ஜ., 115 இடங்களை பிடித்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. முதன்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வான பஜன்லால் சர்மா முதல்வரானார்.
அமைச்சர்களாக பா.ஜ., வின் மூத்த தலைவர் கிரோடி லால் மீனா, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மதன் திலாவர் உட்பட 12 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவற்றில், தேர்தலில் போட்டியிடாத சுரேந்திர பால் சிங்கும் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் கரன்பூர் சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் சுரேந்திர பால் சிங் போட்டியிட்டார்.
காங்., வேட்பாளராக, மறைந்த வேட்பாளர் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் களமிறங்கினார். இத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், 18 சுற்றுகளாக நேற்று எண்ணப்பட்டன.
இதில், ரூபிந்தர் சிங் 94,950 ஓட்டுகளும், சுரேந்திர பால் சிங், 83,667 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ''இதன்படி, 11,283 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியின் அமைச்சர் சுரேந்திர பால் சிங்கை ரூபிந்தர் சிங் தோற்கடித்தார். இந்த வெற்றியின் வாயிலாக சட்டசபையில் காங்கிரசின் பலம், 70 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரூபிந்தர் சிங் கூறுகையில், ''என்னை வெற்றி பெறச் செய்த கரன்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி. எனக்கு எதிராக களமிறங்கிய அமைச்சர் சுரேந்திர பால் சிங்கை, ஆதரித்து மத்திய அமைச்சர்களும் பிரசாரம் மேற்கொண்டனர். எனினும், அவற்றை நிராகரித்து, ஜனநாயகத்தை மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்,'' என்றார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரூபிந்தர் சிங்கிற்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் அவர், ''இந்த வெற்றியின் வாயிலாக பா.ஜ.,வின் கர்வத்தை கரன்பூர் மக்கள் வீழ்த்தியுள்ளனர். மறைந்த குர்மீத் சிங்கின் பொது சேவைக்கு கிடைத்த வெற்றி இது,'' என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து அமைச்சர் சுரேந்திர பால் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.