அயோத்தி ராமர் கோவிலில் விஷமச்செயல்; தொழுகை நடத்திய நபரால் பக்தர்கள் அதிர்ச்சி
அயோத்தி ராமர் கோவிலில் விஷமச்செயல்; தொழுகை நடத்திய நபரால் பக்தர்கள் அதிர்ச்சி
UPDATED : ஜன 10, 2026 07:34 PM
ADDED : ஜன 10, 2026 07:28 PM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் இன்று (ஜனவரி-10) இஸ்லாமியர் ஒருவர், தொழுகை நடத்தி விஷமச்செயலில் ஈடுபட்டது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவில் உள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீதா ரசோய் பகுதிக்கு அருகே காஷ்மீரி உடையில் இருந்த இஸ்லாமிய நபர் அமர்ந்து நமாஸ் செய்யத் தொடங்கியுள்ளார்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்தனர், அப்போது அந்த நபர், 'நாரேஎதக்பீர்', 'அல்லாஹூ அக்பர்' போன்ற மத ரீதியிலான கோஷங்களை எழுப்பினார். அதை தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான அபு அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் அஜ்மீர் தர்காவிற்குச் செல்லும் வழியில் இருந்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த உயர்மட்டப் பாதுகாப்புப் பகுதிக்குள் அவர் எப்படி நுழைந்தார் மற்றும் அவரது உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மகர சங்கராந்தி மற்றும் ராமர்கோவில் கும்பாபிஷேகத்தின் இரண்டாவது ஆண்டு விழா நெருங்குவதால் அயோத்தியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
