பயங்கரவாதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் எச்சரிக்கை
பயங்கரவாதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் எச்சரிக்கை
ADDED : ஜன 18, 2024 02:21 AM

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளை குறிவைத்து, அதன் அண்டை நாடான ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. அனைத்து அண்டை நாடுகளுடனும் மோசமான உறவில் உள்ள பாகிஸ்தானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தான், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் எல்லையை ஒட்டியுள்ள இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் மோதலில் உள்ளது. இந்தியாவை தனக்கு போட்டியாக கருதி, பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக எல்லையைத் தாண்டி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஆதரவு
இதற்காக பல பயங்கரவாத அமைப்புகள், குழுக்களுக்கு, அந்த நாட்டை ஆண்டவர்கள், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தது.
ஆனால், தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த உடன், அதனுடனான எல்லையில், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. இதனால், தலிபான்களின் வெறுப்பையும் அது சம்பாதித்தது.
இந்த நிலையில், மற்றொரு பக்கம், மேற்காசிய நாடான ஈரானுடன், பாகிஸ்தான் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான, 904 கி.மீ., துார எல்லையில் பெரும்பகுதி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் வருகிறது.
இங்கு, 2012ல் உருவான, ஜெய்ஸ் அல் அதில் என்ற சன்னி முஸ்லிம்கள் பயங்கரவாத அமைப்பு, ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஈரானுக்கு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வந்தது.
இதையடுத்து, இந்த அமைப்பை அமெரிக்கா மற்றும் ஈரான் ஏற்கனவே தடை செய்துள்ளன. ஆனாலும், ஜெய்ஸ் அல் அதில் அமைப்பினர், தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
நிலைமை கைமீறி போனதையடுத்து, எச்சரிக்கை விடுக்கும் வகையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைவர்களை குறிவைத்து, ஈரான் ஏவுகணை மற்றும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக நேற்று முன்தினம் திடீர் தாக்குதல்களை நடத்தியது.
கண்டனம்
இந்த தாக்குதல்களில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தன் நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு தகுந்த பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் உள்ள வெளியுறவுத் துறையில், பாகிஸ்தானுக்கான துாதர் எதிர்ப்பை பதிவிட்டார்.
அதுபோல, இஸ்லாமாபாதில் உள்ள ஈரான் துாதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்தும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பாகிஸ்தான் பதிவிட்டுள்ளது.