ADDED : பிப் 12, 2025 07:01 AM
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. 2023 மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றிய சந்திரசேகர் என்பவர், ஆணையத்தில் ஊழல் நடப்பதாகவும், உயர் அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாகவும் கடிதம் எழுதி வைத்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த, நாகேந்திரா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார்.
இதுபோல பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் நேர்முக உதவியாளர் சோமு தொல்லை கொடுப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, பெலகாவி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றிய ருத்ரண்ணா என்பவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ்.ஐ., மரணம்
யாத்கிரில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய பரசுராம், மர்மமான முறையில் இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னாரெட்டி பாட்டீல் துான்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா கொடுத்த தொல்லை காரணம் என்று கூறப்பட்டது. தந்தை -- மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவானது.
இதனால், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் தொடர்ந்து தற்கொலை செய்கின்றனர். இது தான் காங்கிரஸ் அரசின் 6வது வாக்குறுதி' என்று, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், மைசூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓடனாடி சேவா சங்கம், கடந்த 2021 முதல் 2023 வரை மாநிலத்தில் தற்கொலை செய்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாநில குற்றப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு துறைக்கு கடிதம் எழுதி தகவல்கள் கேட்டிருந்தது.
இதற்கு கிடைத்துள்ள பதிலில், போலீஸ் துறையில் பணி செய்தவர்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 328 பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மன அழுத்தம்
கடந்த 2021ல் 115; 2022ல் 96; 2023ல் 117 பேர் தற்கொலை செய்து உள்ளனர். அதிகபட்சமாக பெங்களூரில் மட்டும் போலீஸ் துறையில் பணியாற்றிய 54 பேர் தற்கொலை செய்திருப்பது தெரிந்துள்ளது.
அடுத்தபடியாக மைசூரு, பெலகாவி, தார்வாடில் தலா 16; கதக், கலபுரகி, ஹாசன், துமகூரில் தலா 12 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இது குறித்து, ஓடனாடி சேவா சங்கத்தினர் கூறுகையில், 'உயர் அதிகாரிகள் நெருக்கடி, பணி அழுத்தம், மன அழுத்தம் அவசர காலங்களில் விடுப்பு எடுக்க முடியாமல் போவது உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து உள்ளனர். 'குடும்ப தகராறு உட்பட தனிப்பட்ட காரணங்களால், சிலர் தற்கொலை செய்து இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் நிலை ஊழியர்கள். தற்கொலை செய்தவர்களை நம்பி தான் அவர்களின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கர்நாடகாவில், 2019 ஜூலை 26 முதல் 2023 மே 20ம் தேதி வரை, பா.ஜ., தான் ஆட்சியில் இருந்தது. இதனால், 'பா.ஜ., ஆட்சியில் தான் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தற்கொலை அதிகமாக நடந்துள்ளது' என, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்கு, 'உங்கள் ஆட்சி முடிவதற்குள் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தற்கொலை, பல மடங்கு அதிகரிக்கலாம். நீங்கள் எங்களை பற்றி பேசாதீர்கள்' என்று பா.ஜ., தரப்பினரும், சமூக வலைதளங்களில் பதிலடி தந்து வருகின்றனர்.