3 ஆண்டில் ரூ.69 கோடி பரிவர்த்தனை ஐஸ்வர்யா வங்கி கணக்கில் அதிர்ச்சி
3 ஆண்டில் ரூ.69 கோடி பரிவர்த்தனை ஐஸ்வர்யா வங்கி கணக்கில் அதிர்ச்சி
ADDED : ஜன 17, 2025 07:17 AM

பெங்களூரு: மோசடி பெண் ஐஸ்வர்யா கவுடா வங்கி கணக்கை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்று ஆண்டுகளில் அவர் 69 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்தது தெரிந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, பலரிடம் மோசடியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா கவுடா பற்றி ஒவ்வொரு நாளும் பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது.
ஐஸ்வர்யா பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிந்ததால், அவரது வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த 2021 முதல் 2023 வரை ஐஸ்வர்யா வங்கி கணக்கிற்கு 50 கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. 2023 முதல் 2024 வரை 19 கோடி ரூபாய் வந்தது.
இதில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வேறு சில வங்கி கணக்குகளுக்கு ஐஸ்வர்யா பரிமாற்றம் செய்துள்ளார். யாருடைய வங்கி கணக்கிற்கு பணம் சென்றது என்று போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
பொதுவாக, லட்சக்கணக்கில் ஒருவருடைய வங்கி கணக்கிற்கு பணம் வருகிறது என்றால், அது பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கி அதிகாரிகள் விசாரிப்பதும், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்பதும் வழக்கம்.
ஆனால், ஐஸ்வர்யா வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் வந்த போதும், வங்கி அதிகாரிகள் அது பற்றி ஐஸ்வர்யாவிடம் எதுவும் கேட்கவில்லை.
வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது வருமான வரித்துறைக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் ஐஸ்வர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் கர்நாடகாவை சேர்ந்த, கோல்கட்டாவில் வசிக்கும் டாக்டர் ஒருவர், நிலம் வாங்கி தருவதாக ஐஸ்வர்யா தன்னிடம் 1.10 கோடி ரூபாய் ஏமாற்றியதாக, ஏ.சி.பி., பரத் ரெட்டியிடம் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
இது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடக்கிறது. வரும் நாட்களில் ஐஸ்வர்யா மீது இன்னும் பலர் மோசடி புகார்கள் வரும் என கூறப்படுகிறது.