விமானப்படை அதிகாரி மீது தாக்குதல்; ரத்தம் சொட்டும் வீடியோவால் அதிர்ச்சி
விமானப்படை அதிகாரி மீது தாக்குதல்; ரத்தம் சொட்டும் வீடியோவால் அதிர்ச்சி
ADDED : ஏப் 22, 2025 12:44 AM

பெங்களூரு: பெங்களூரில் விமானப் படை அதிகாரியை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. காயமடைந்த நிலையில் ரத்தம் சொட்டும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக இருப்பவர் ஆதித்யா போஸ். இவரது மனைவி மதுமிராவும் விமானப்படையில் ஸ்குவாடிரன் லீடராக உள்ளார்.
தாக்கினார்
தன் தந்தையை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, நேற்று முன்தினம் காலை கொல்கட்டாவுக்கு விமானத்தில் செல்ல ஆதித்யா போஸ் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக விமான நிலையத்துக்கு கணவன் - மனைவி இருவரும் காரில் சென்றனர். இவர்களின் காரை, இருசக்கர வாகனத்தில் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார்.
அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதித்யா போஸ், ரத்தம் சொட்டச்சொட்ட வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நானும், என் மனைவியும் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது எங்கள் காரை, பின்தொடர்ந்து வந்த நபர், கன்னடத்தில் திட்டினார். காரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., என்ற எழுத்தை பார்த்தபின், என் மனைவியை திட்ட ஆரம்பித்தார். அந்நபர் காரை வழிமறித்து நிறுத்தினார்.
நான் காரில் இருந்து இறங்கியவுடன், இருசக்கர வாகனத்தில் வந்தவர், அவரது கையில் இருந்த கீ செயினால், என் நெற்றியில் பலமாக தாக்கினார். இதனால், ரத்தம் கொட்டியது.
'நாட்டை பாதுகாக்கும் வீரர்களிடம் இப்படி தான் நடந்து கொள்வீர்களா?' என்று கத்தினேன். அப்போது அங்கிருந்தோர், நாங்கள் தவறு செய்துவிட்டதாக நினைத்து, என்னையும், என் மனைவியையும் திட்டினர்.
காரை வழிமறித்த நபர், கல்லை எடுத்து என் கார் மீது வீச முயற்சித்தார். அதை தடுத்தபோது, என் தலையில் தாக்கினார். அங்கிருந்தவர்கள் அவரை தடுக்காமல், என்னை பிடித்துக் கொண்டனர். அப்போது, அந்நபர் என் வலது கைவிரலை கடித்தார்.
கால்சென்டர்
இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க சென்றால், யாரும் புகார் எடுப்பதில் அக்கறை காண்பிக்கவில்லை.
இதுபற்றி எங்கள் படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
கர்நாடக மக்கள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, விமானப்படை அதிகாரியை தாக்கிய விகாஸ் குமார் என்பவரை கைது செய்து விசாரிக்கிறோம். அவர், தனியார் கால்சென்டரில் பணியாற்றி வருகிறார்' என்றனர்.