நான்கு வீரர்களை சுட்டுக்கொன்ற சி.ஐ.எஸ்.எப்., வீரர் கைது
நான்கு வீரர்களை சுட்டுக்கொன்ற சி.ஐ.எஸ்.எப்., வீரர் கைது
ADDED : செப் 29, 2026 09:53 PM
கதுவா: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு அதிகாரி உட்பட சக வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் மஷ்கா பகுதியில் நீர் மின் நிலையம் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., தலைமை கான்ஸ்டபிள் அவ்தேஷ் குமார் சிங், அலுவலகத்தில் சக வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தனக்கு அளித்த ஏ.கே.,47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக அவர்களை நோக்கி சுட்டார்.
இதில், படுகாயமடைந்த நான்கு வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, உதவி கமாண்டர் அங்கித் குமார் பாண்டே, சப் – இன்ஸ்பெக்டர் லஷ்மன் சிங், கான்ஸ்டபிள்கள் ரபிக் அகமது மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவ்தேஷ் குமாரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
