பெண் என்பதற்காக படம் எடுக்க பணம் கொடுப்பதா?: மலையாள இயக்குநர் அடூர் சர்ச்சை பேச்சு
பெண் என்பதற்காக படம் எடுக்க பணம் கொடுப்பதா?: மலையாள இயக்குநர் அடூர் சர்ச்சை பேச்சு
ADDED : ஆக 04, 2025 11:49 PM

திருவனந்தபுரம்: 'பெண் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் திரைப்படம் எடுக்க பணம் அளிக்கக் கூடாது' என மூத்த திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், 84, தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதியுதவி கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, பெண் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் திரைப்படம் எடுக்க, 1.5 கோடி ரூபாய் நிதியுதவியை அரசு வழங்குகிறது.
சமீபத்தில், திருவனந்தபுரத்தில், கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாநில கலாசாரத் துறை அமைச்சர் சஜி செரியன் பங்கேற்றார்.
இந்த விழாவில், மூத்த எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
பெண் இயக்குனர்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு திரைப்படம் எடுக்க, 1.5 கோடி ரூபாய் நிதியுதவியை அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், இது ஊழலுக்கு வழிவகுக்கும்.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, படம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
எதிர்ப்பு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. மக்களின் வரிப்பணம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு 1.5 கோடி ரூபாய் வழங்குவதற்கு பதில், அதை பிரித்து மூன்று பேருக்கு தலா 50 லட்சம் ரூபாயாக வழங்கலாம். மேலும், பெண்கள் என்பதற்காக மட்டும் திரைப்படம் எடுக்க பணம் கொடுக்கக் கூடாது. அவர்களுக்கும் பயிற்சி தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
அடூர் கோபால கிருஷ்ணின் இந்த பேச்சுக்கு, மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த கலாசாரத் துறை அமைச்சர் சஜி செரியன், ''இந்த காலத்தில் தரமான திரைப்படங்களை எடுக்க 1.5 கோடி ரூபாய் கூட போதாது. 100 ஆண்டு கால மலையாள சினிமாவில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களைச் சேர்ந்த இயக்குனர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
கடும் கண்டனம் அடூர் கோபால கிருஷ்ணன் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
பல்வேறு தரப்பினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும், அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, சமூக ஆர்வலர் தினு வெயில் அளித்த புகாரின்படி, அடூர் கோபாலகிருஷ்ணன் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.