ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா... ஆம்...இல்லை?: கட்சி நிர்வாகிகளிடம் கேட்கிறார் ராகுல்
ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா... ஆம்...இல்லை?: கட்சி நிர்வாகிகளிடம் கேட்கிறார் ராகுல்
UPDATED : செப் 03, 2024 05:43 PM
ADDED : செப் 03, 2024 05:22 PM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசித்து கூறும்படி ராகுல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்திருக்கிறது.
90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு ஆக.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டாக போட்டியிட்டு 10ல் காங்., 5 தொகுதிகளில் வென்றன. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் மாநில தலைவர் புபேந்தர் சிங் ஹூடா கூறியிருந்தார்.
ஆலோசனை
தேர்தலை எதிர்கொள்வது குறித்து, மாநில தேர்தல் குழுவினருடன் நேற்று( செப்.,02) ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலில், ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து சொல்லும்படி ஹரியானா மாநில காங்., நிர்வாகிகளிடம் ராகுல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3- 4 தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க காங்., முன்வந்துள்ளதாகவும், முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளரை முடிவு செய்துவிட்டதாகவும் , ஓரிரு நாளில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
கூட்டணி ஏன்
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் ‛ இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றால், பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ராகுல் நம்புகிறார். பார்லிமென்ட் உள்ளேயையும், வெளியேயும் பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ‛இண்டியா' கூட்டணியை வலுப்படுத்த காங்., விரும்புகிறது. இங்கு வெற்றி பெறுவதற்கு, எதிர்க்கட்சிகளின் ஓட்டு ஒன்று சேர்வது முக்கியம் என நினைக்கும் காங்கிரஸ், கூட்டணி குறித்த முடிவை எடுக்கும்படி மாநில நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளது.
ஆம் ஆத்மியின் நிலை என்ன
இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: காங்கிரஸ் முடிவை வரவேற்கிறோம். பா.ஜ.,வை வீழ்த்துவது மிகவும் முக்கியமானது. கெஜ்ரிவாலுடன் ஆலோசனை செய்து இது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.