2025ல் நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான ஸ்ரீகங்காநகர்; 50 டிகிரி செல்சியசால் மக்கள் அவதி
2025ல் நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான ஸ்ரீகங்காநகர்; 50 டிகிரி செல்சியசால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 07:27 AM

ஜெய்பூர்; 2025ம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவான பகுதியாக ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 50 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.
நாடு முழுவதும் பரவலாக வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மழை, வெயில் என பருவங்கள் மாறி வரும் சூழலில், தற்போது வெப்பம் பல பகுதிகளில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வெப்பநிலை அளவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. இம்முறை நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான பகுதியாக ஸ்ரீகங்காநகர் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி உள்ளதாவது;
ஸ்ரீகங்காநகரில் 49.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. ஜூன் 13ம் தேதி இந்த வெப்ப நிலை நிலவியது. இந்த ஆண்டில் வேறு எந்த வானிலை மையத்திலும் பதிவாகாத அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் மற்ற பகுதிகளிலும் அதிக வெப்பநிலை பதிவானது. சுரு பகுதியில் 47.6 டிகிரி செல்சியஸ், ஜெய்சால்மரில் 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொளுத்தியது.