இந்தியா வருகிறார் சாதனை படைத்த விண்வெளி வீரர் சுக்லா: நெகிழ்ச்சி பதிவு
இந்தியா வருகிறார் சாதனை படைத்த விண்வெளி வீரர் சுக்லா: நெகிழ்ச்சி பதிவு
UPDATED : ஆக 16, 2025 01:49 PM
ADDED : ஆக 16, 2025 01:43 PM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.
அண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த பிறகு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் பத்திரமாக பூமி திரும்பினர். இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) மாலை சுக்லா இந்தியாவிற்கு வருகிறார். அவர் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார்.
அவர் ஆகஸ்ட் 23ம் தேதி டில்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதற்கு விமானத்தில் ஏறிவிட்டார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா திரும்ப விமானத்தில் அமர்ந்திருக்கும்போது, என் இதயத்தில் ஒருவிதமான உணர்வுகள் தோன்றியது. விண்வெளி பயணத்திற்குப் பிறகு முதல் முறையாக எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாட்டில் உள்ள அனைவரையும் சந்திக்க இருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவுக்குத் திரும்பி வர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாம் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். விண்வெளிப் பயணத்தில் ஒரே நிலையானது மாற்றம். அது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு சுக்லா கூறியுள்ளார்.