UPDATED : ஜூலை 11, 2025 10:36 PM
ADDED : ஜூலை 11, 2025 10:23 PM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்பும் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவை வரவேற்க காத்திருக்கிறோம் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தின் கீ்ழ், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் நான்கு பேரும் வரும் 14ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுபான்ஷூ சுக்லாவின் தந்தை சம்பு தயாள் சுக்லா கூறியதாவது: விண்வெளியில் அனைத்தும் நன்றாக நடந்து கொண்டு உள்ளது. திட்டப்பணிகள் சிறப்பாக நடப்பதாக சுக்லா தெரிவித்தார். பணிபுரியும் இடம், உறங்கும் இடம், ஆய்வகம்,தினமும் பணி செய்யும் இடத்தை எங்களிடம் சுபான்ஷூ சுக்லா காட்டினார்.
அவருடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்தையும் தெளிவாக எடுத்துக்கூறினார். பூமிக்கு திரும்பும் அவரை வரவேற்க ஆர்வமாக காத்திருக்கிறோம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவருக்காக காத்துக் கொண்டுள்ளோம் என்றார்.
தாயார் ஆஷா சுக்லா கூறியதாவது: விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி மற்றும் பூமி எவ்வளவு அழகாக தெரிகிறது என்பது பற்றி சுக்லா கூறினார். அங்கு எங்களது மகன் மகிழ்ச்சியாகவும், நலமுடனும் இருப்பதை பார்க்கும் போது மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
அவரது வருகைக்காக காத்திருக்கிறோம். பருவநிலை மற்றும் மற்ற சூழ்நிலைகளை பொறுத்து அவரது வருகை அமையும். அவர் எப்போது வந்தாலும் வரவேற்க தயாராக உள்ளோம். கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் உள்ளதால் விரும்பியதை உண்ண முடியவில்லை என கூறினார். இதனால் அவர் கேட்பதை சமைத்து கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

