எஸ்.ஐ., தேர்வு முறைகேடு 3 ஆண்டுக்கு பின் மூவர் கைது
எஸ்.ஐ., தேர்வு முறைகேடு 3 ஆண்டுக்கு பின் மூவர் கைது
ADDED : பிப் 19, 2024 06:56 AM
கலபுரகி: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, கடந்த 2021ல் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதும், முறைகேடு நடந்தது தெரிந்தது.
அதாவது பணம் கொடுத்து, சட்டவிரோதமாக தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றனர். இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், அரசு ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர், கலபுரகியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஆர்.டி.பாட்டீல். அவரும் கைது செய்யப்பட்டார்.
ஒரு ஆண்டு சிறையில் இருந்த பின்னர், கடந்த ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இன்னொரு தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கி, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கலபுரகி சி.ஐ.டி., போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், கலபுரகி ஷாதபாத் சுகாதாரத்துறை ஊழியர் சந்திரகாந்த் பாட்டீல், 45, அப்சல்பூர் அரசு விடுதியின் கண்காணிப்பாளர் பசவராஜ் சித்தராமப்பா, 42, சசிதர், 25 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
வினாத்தாள் கையில் கிடைத்ததும், அதற்குரிய விடைகளை புத்தகத்தில் தேடி பிடித்து, இவர்கள் மூன்று பேரும் ஆர்.டி.பாட்டீலுக்கு கூறியது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது.

