ADDED : நவ 14, 2024 09:36 PM

பசவனகுடி ; நிர்வாண போட்டோ அனுப்பும்படி, தனியார் மருத்துவமனை பெண் டாக்டரை மிரட்டிய போலீஸ் எஸ்.ஐ., மீது, புகார் பதிவாகியுள்ளது.
பெங்களூரின், பசவனகுடியில் வசிக்கும், 23 வயது இளம்பெண், 2020ல் எம்.பி.பி.எஸ்., படித்தார்.
அதே ஆண்டு போலீஸ் அகாடமியில் ராஜ்குமார் ஜோடப்பா, 25, எஸ்.ஐ., பயிற்சியில் இருந்தார்.
இளம்பெண்ணுக்கும், இவருக்கும் முகநுால் மூலம், அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது; சந்தித்து பேசி கொண்டனர்.
படிப்பை முடித்த ராஜ்குமார், பெங்களூரின் பசவனகுடியில் எஸ்.ஐ.,யாக பணியாற்றுகிறார். இளம் பெண், தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார்.
சமீப நாட்களாக ராஜ்குமாரின் நடத்தை மாறியது. நிர்வாண போட்டோ அனுப்பும்படி, பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்தார். இவர் மறுத்ததால் தகாத வார்த்தைகளால் திட்டினார். பெண் டாக்டர் தன்னுடன் காதலாக பேசியதை, பதிவு செய்து வைத்து கொண்டு மிரட்டினார்.
அதுமட்டுமின்றி பெண் டாக்டரிடம், 1.71 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டதால், 'வாட்ஸாப்' மூலம் தொடர்பு கொண்ட ராஜ்குமார், 'பணத்தை திருப்பி கொடுக்க முடியாது.
என்ன செய்கிறாயோ, செய்து கொள். பணம் வேண்டுமானால் போலீஸ் நிலையத்துக்கு வந்து, வாங்கி செல்' என மிரட்டினார்.
மனம் நொந்த பெண் டாக்டர், ஒரு முறை தற்கொலைக்கு முயற்சித்தார். நாளுக்கு நாள் எஸ்.ஐ., ராஜ்குமாரின் தொல்லை அதிகரித்தது.
இது தொடர்பாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம், பெண் டாக்டர் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.