'சித்தராமையாவும், சிவகுமாரும் அண்ணன், தம்பி போன்றவர்கள்'
'சித்தராமையாவும், சிவகுமாரும் அண்ணன், தம்பி போன்றவர்கள்'
ADDED : ஜன 04, 2025 07:49 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் அண்ணன், தம்பி போன்றவர்கள்,'' என, மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பஸ் பயண கட்டணத்தை உயர்த்தி 10 ஆண்டுகளாகின்றன. மட்டன், பருப்பு விலை அதிகரித்தால், மக்கள் வாங்குகின்றனர். அதே போன்று பஸ் பயண கட்டணமும் அதிகரிக்கிறது.
காங்கிரஸ் அரசு, அதிக நாட்கள் இருக்காது என, முன்னாள் பிரதமர் தேவகவுடா அவ்வப்போது கூறி வந்தார். தந்தையின் பழக்கம், மகன் குமாரசாமிக்கும் வந்துள்ளது. அரசு இருப்பதையும், கவிழ்வதையும் குமாரசாமி முடிவு செய்வாரா? மக்கள் தான் முடிவு செய்வர். குமாரசாமியின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. மக்களின் சான்றிதழ் மட்டுமே வேண்டும்.
முதல்வர் மாற்றம் என, யார் கூறியது? முதல்வர் சித்தராமையா யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் செயல்படுகிறார். சிவகுமாரும், சித்தராமையாவும் அண்ணன், தம்பி போன்று அன்யோன்யமாக உள்ளனர்.
கட்சியை பலப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தியதற்கு வேறு அர்த்தம் கற்பித்தால் எப்படி? முதல்வர் சித்தராமையா, பட்ஜெட், திட்டங்கள் குறித்து ஆலோசித்தார். எங்களுக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

