அடுத்த 2 ஆண்டில் உபரி பட்ஜெட் சட்டசபையில் சித்தராமையா உறுதி
அடுத்த 2 ஆண்டில் உபரி பட்ஜெட் சட்டசபையில் சித்தராமையா உறுதி
ADDED : மார் 01, 2024 06:31 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில், ஒரே ஒரு முறை மட்டுமே துண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொருளாதாரத்தை நிலையாக கொண்டு வந்து, உபரி பட்ஜெட் தாக்கல் செய்வேன்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
நிதித் துறையை வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் ஆண்டிற்கு, மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 383 கோடி ரூபாய்க்கு மாநில பட்ஜெட்டை, பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்தார்.
அதன்பின், சட்டசபை, மேலவையில் பட்ஜெட் மீது அனைத்து கட்சி உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடந்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முதல்வர் சித்தராமையா நேற்று பேசியதாவது:
மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய பங்கை, கொடுக்காமல் கர்நாடகாவின் ஏழு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி செய்கிறது. இதை, இங்குள்ள எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஏற்றுக்கொள்கின்றனர். இரு கட்சிகளும் மக்களுக்கு துரோகம் செய்கின்றன.
கடந்த 2023ல் பசவராஜ் பொம்மை 3.09 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தாண்டில், நான் 3.71 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன் பொம்மை பட்ஜெட்டை விட, 62,000 கோடி அதிகமாகும்.
இதில், வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே, 1.20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் 16ம் தேதி தாக்கல் செய்தது 3.71 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டாகும். தற்போது இதை உயர்த்தி, 3.79 லட்சம் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முழு பட்ஜெட்டுக்கு இந்த அவை ஒப்புதல் வழங்கும்படி வேண்டுகிறேன்.
மாநிலத்தில், ஒரே ஒரு முறை மட்டுமே துண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொருளாதாரத்தை நிலையாக கொண்டு வந்து, உபரி பட்ஜெட் தாக்கல் செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை, மேலவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், இரு அவைகளும், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

