ADDED : ஏப் 29, 2025 03:45 AM

பெலகாவி : மத்திய அரசுக்கு எதிராக பெலகாவியில் நடந்த போராட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, அவருக்கு எதிராக கோஷம் போட்ட பா.ஜ., மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பை சரியாக கவனிக்காத கூடுதல் எஸ்.பி.,யை அடிப்பதற்காக முதல்வர் சித்தராமையா கையை ஓங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெலகாவியில் நேற்று, மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், முதல்வர் சித்தராமையா பேச்சை துவங்கிய போது, கூட்டத்திற்குள் புகுந்த பா.ஜ., மகளிர் அணியினர், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதை சற்றும் எதிர்பாராத முதல்வர், பேச்சை நிறுத்தினார். மேலும், போலீசாரை பார்த்து, ''வாய்யா இங்கே... பெலகாவி எஸ்.பி., எங்கே?,'' எனக் கேட்டார்.
அருகில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்.பி., நாராயண் பரமணியை பார்த்து, ''என்னய்யா இது...'' என்றபடி, அவரை அடிக்க கையை ஓங்கினார். பின், சுதாரித்து நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையில், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பா.ஜ., மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். காங்கிரசார், அந்த வாகனத்தை சுற்றி நின்று கோஷம் எழுப்பினர். போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர்.

