ADDED : பிப் 14, 2024 05:03 AM

பெங்களூரு, : ''முதல்வர் சித்தராமையா பொய் சொல்வதில் வல்லவர்,'' என்று, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தாக்கி உள்ளார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில் மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டி:
வளர்ச்சி பணிகள் செய்ய, கர்நாடக அரசிடம் பணம் இல்லை என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் வாக்குறுதிகள் நிறுத்தப்படும். தங்கள் தோல்வியை மறைக்க, மத்திய அரசு மீது, கர்நாடக அரசு குற்றம்சாட்டுகிறது. 2023 - 2024 கர்நாடக பட்ஜெட் மதிப்பு 2.98 லட்சம் கோடி ரூபாய். அதில் 1.13 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யவில்லை.
பல்வேறு திட்டங்களுக்காக, மத்திய அரசிடம் இருந்து கிடைத்த நிதியை, கர்நாடக அரசு செலவு செய்யாமல் வைத்து உள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்த போது, கடந்த 2013 ல் சித்தராமையா முதல்வராக இருந்தார். அப்போது அவர் மத்திய அரசிடம் எவ்வளவு நிதி கேட்டார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தான், கர்நாடகாவிற்கு அதிக வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. உண்மையை சொல்லப் போனால், பிரதமர் மோடிக்கு, சித்தராமையா வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் பொய் பிரசாரம் செய்கிறார். அவர் பொய் சொல்வதில் வல்லவர்.
மத்திய அரசின் திட்டங்களை, கர்நாடகா அரசின் திட்டங்கள் என்று, கவர்னர் உரையில் பொய் கூறி உள்ளனர். ஒருபக்கம் அரசியல் சாசனத்தை படிக்கச் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாட்டை பிரிக்க முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.

