ADDED : பிப் 22, 2024 06:53 AM

மைசூரு: மைசூரு லோக்சபா தொகுதியில், மகன் யதீந்திராவை களம் இறக்க, முதல்வர் சித்தராமையா தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு. ஆனால் மைசூரு லோக்சபா தொகுதி, பா.ஜ., வசம் உள்ளது. கடந்த 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோதே 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மைசூரில் பா.ஜ., வென்றது.
முதல்முறை போட்டியிட்ட, பிரதாப் சிம்ஹா வெற்றி பெற்றார். கடந்த லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு 2வது முறையாக வென்றார்.
இம்முறை மைசூருவை எப்படியாவது, பா.ஜ.,விடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். பா.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு எதிராக, பலமான வேட்பாளரை காங்கிரஸ் தேடிவருகிறது. மைசூரு தொகுதியில் மகன் யதீந்திராவை களமிறக்கலாமென, முதல்வர் சித்தராமையா நினைத்தார்.
இதற்காக தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். அடுத்து நெருங்கிய நண்பர்களுடனும், அவர் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
சித்தராமையா நினைத்தது போல, மைசூரு தொகுதியின் நிலைமை இல்லை. ஒருவேளை யதீந்திராவை களமிறக்கினால், எளிதில் வெற்றி பெற முடியுமா என்றும் தெரியவில்லை.
பா.ஜ., கூட்டணி வேட்பாளர், யதீந்திராவுக்கு முள்ளாக இருக்கலாம். இதனால் அவசரப்பட வேண்டாம் என்று நண்பர்களிடம் சித்தராமையா கூறியுள்ளார்.
குமாரசாமி முதல்வராக இருந்தபோதே, நிகில் குமாரசாமி தோற்றுப் போனார். இதனால் கேலி, கிண்டலுக்கு குமாரசாமி ஆளானார். யதீந்திரா தோற்றுப் போனாலும், தனக்கும் குமாரசாமியின் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் நண்பர்களிடம், சித்தராமையா கூறி இருக்கிறார்.
மகனை களமிறக்குவது குறித்து தீவிர யோசனை செய்யும் முதல்வர், தயக்கம் காட்டுவது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.