ADDED : பிப் 16, 2025 10:34 PM

பெங்களூரு : மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் போன்று நடந்து கொள்வதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:
நீர்ப்பாசன பிரச்னையில் மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாரபட்சமின்றி போராட தயாராக இருப்பதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறி இருப்பதை வரவேற்கிறேன். நிலம், நீர், மொழி பிரச்னையில் நான் அரசியல்வாதியாக இல்லாமல், கன்னடராகவே செயல்பட்டு இருக்கிறேன் என்பதை அவர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
நினைவு இருக்கலாம்
கடந்த 2016 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம், 10 நாட்கள், தமிழகத்திற்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட போது ஏற்பட்ட நெருக்கடியின் போது, முதல்வராக நான் உங்கள் வீட்டிற்கு வந்து கையை பிடித்து, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினேன் என்பது உங்களுக்கு நினைவு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மாநிலத்தின் நலன்களை பாதுகாப்பது தொடர்பாக பிரச்னைகளில், ஒரு கன்னடராக மாநிலத்திற்கு நீதி வழங்க நீங்கள் போராடியதை மாநில மக்கள் கவனித்து உள்ளனர். ஆனால், சமீபகாலமாக நீங்களும், உங்கள் கட்சியும் மத்திய அரசின் செய்தி தொடர்பாளர்களை போல ஒருதலைபட்சமாக செயல்படுவதை, 7 கோடி கன்னடர்களும் கவனிக்கின்றனர்.
மகன் குமாரசாமியை மத்திய அமைச்சராக்க, இவ்வளவு சமரசம் செய்ய வேண்டுமா. நீர்பாசன பிரச்னையில் பாரபட்சமற்றவராக இருப்பவர், கர்நாடகாவின் நலன்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார். மகதாயி படுகையில் 995.30 கோடி செலவில் கட்டப்படும் கலசா கால்வாய் திட்ட விரிவான அறிக்கை, கடந்த 2023 ல் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறை, கோவா மாநிலத்தின் ஆட்சேபனையால் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவா அரசு ஒப்புதல் கொடுத்தால், திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
இதனால் உங்கள் கூட்டாளியான பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி, திட்டத்திற்கு அனுமதி வாங்கி கொடுங்கள். பண்டூரி கால்வாய் மாற்று திட்டத்திற்கு தேவையான, வனப்பகுதி நிலத்தை கையகப்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கடந்த 2024ல் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மற்ற செயல்முறைகளை மாநில அரசு முடித்து விட்டது. திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பது மட்டும் பாக்கி உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் கடந்த 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. கர்நாடகாவிற்கு 173 டி.எம்.சி., தண்ணீரை உறுதி செய்தது.
இந்த நீர் பங்கில் 130 டி.எம்.சி.,யை வட கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களுக்கு நீர்பாசனம் செய்ய வசதியாக, கிருஷ்ணா மேலணை திட்டத்தின் 3வது கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதிவாதி மாநிலத்தின் ஆட்சேபனை மனுவை மேற்கொள் காட்டி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு மறுக்கிறது.
மேகதாது
அரசிதழ் வெளியிடப்பட்டால் தேசிய திட்டமாக அறிவிப்பது எளிதாக இருக்கும். பத்ரா மேலணை திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டால் அது வறட்சியால் பாதிக்கப்பட்ட சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரே மக்களுக்கு வர பிரசாதமாக இருக்கும். பெங்களூரு நகரத்திற்கு குடிநீர் வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் மேகதாது திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் அனைத்து விபரங்களையும் தேவகவுடா மனப்பாடம் செய்து இருக்கலாம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று கொடுத்தால், பெங்களூரு மக்கள் உங்களுக்கு என்றென்றும் கடன் பட்டு இருப்பர்.
தண்ணீர் பிரச்னைக்காக நீங்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு, முழு கர்நாடகாவும் உங்களுடன் இருக்கும். கர்நாடகாவுக்கு மத்திய அரசு இழைக்கும் அநீதிகளில், தற்போது நீர்பாசனத்துறைக்கு ஏற்படும் அநீதி பற்றி மட்டும் நான் கூறி உள்ளேன். வரி பங்கீடு, இயற்கை பேரிடர் நிவாரணம், ரயில்வே திட்டங்களை பொறுத்தவரை, கர்நாடகாவை எதிரியாக மத்திய அரசு பார்க்கிறது.
இந்த பிரச்னைகள் குறித்து ராஜ்யசபாவில் நீங்கள் பேசுவீர்கள் என்று மாநில மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. எதற்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும் தேவகவுடாவை தான் மக்கள் பார்த்து உள்ளனர்.
ஆனால், தற்போது 'மோடியின் சியர்லீடர்' போல தேவகவுடா நடந்து கொள்கிறார் என்று மக்கள் சொல்கின்றனர் என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். உடல்ரீதியாக நீங்கள் சற்று பலவீனமாக தோன்றினாலும், மனரீதியாக வலிமையாக உள்ளீர்கள்.
இப்போதாவது கட்சி, அரசியலுக்கு அப்பால் சென்று கன்னடர்கள் நலன்களை பாதுகாக்கும் அரசியல்வாதி போன்று செயல்படுமாறு உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். அப்படி செய்தால் 7 கோடி கன்னடர்களும் உங்கள் பின்பு இருப்பர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.