துமகூரில் கிரிக்கெட் மைதானம் டிச., 2ல் சித்தராமையா அடிக்கல்
துமகூரில் கிரிக்கெட் மைதானம் டிச., 2ல் சித்தராமையா அடிக்கல்
ADDED : நவ 22, 2024 07:21 AM

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் போன்று, துமகூரிலும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணியை, டிச., 2ல் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.
தென் மாநிலங்களில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றால், அனைவரின் 'சாய்ஸ்' சென்னை சேப்பாக்கம், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் தான்.
தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூரு சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதுபோன்று கிரிக்கெட் விளையாட்டிலும், இளம் தலைமுறையினர் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி துவங்கியது முதல், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர், கண்டிப்பாக அதில் இடம் பெற்றிருப்பார்.
மைசூரு, ஷிவமொக்கா, ஹூப்பள்ளியில் கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும், அவை சர்வதேச தரத்தில் இல்லை.
எனவே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் போன்று துமகூரிலும் கிரிக்கெட் மைதானம் கட்ட வேண்டும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது.
இதையடுத்து, மாவட்ட பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மைதானம் அமையும் இடத்தை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளும், கொள்ளஹள்ளியில் உள்ள வசந்த நரசாபுராவில், 41 ஏக்கர் நிலம் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சருக்கும் தகவல் தெரிவித்தார். இந்த இடத்தை, கே.எஸ்.சி.ஏ., சங்கத்தினர் நேரில் சென்று பார்வையிட்டு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
'இதையடுத்து, டிச., 2ம் தேதி புதிய கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான பணியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். இங்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் போன்று அனைத்து விதமான வசதிகளும் இடம் பெற உள்ளதாக பரமேஸ்வர் தெரிவித்தார் - நமது நிருபர் -.