போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் 'டிவி'
போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் 'டிவி'
ADDED : ஏப் 28, 2025 05:56 AM

பெங்களூரு : 'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், 'டிவி' சேனல் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பா.ஜ., தலைவர்கள், 'சித்தராமையா, பாகிஸ்தான் செல்லட்டும்' என்று கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
ஆதரிக்கவில்லை
இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; போரை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.
சித்தராமையாவின் இந்த கருத்தை, பாகிஸ்தானின் முன்னணி, 'டிவி' நிறுவனமான ஜியோ நியூஸ், சித்தராமையாவின் புகைப்படத்துடன் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. 'போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்' என்றும் செய்தி வாசித்தது.
![]() |
இந்த வீடியோவை, பா.ஜ.,வைச் சேர்ந்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:
'பாகிஸ்தான் ரத்னா' முதல்வர் சித்தராமையா அவர்களே... உங்கள் குழந்தைத்தனம், அபத்தமான அறிக்கையால் ஒரே இரவில் பாகிஸ்தானில் உலக புகழ் பெற்று உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள்.
நீங்கள் எப்போதாவது பாகிஸ்தான் சென்றால், உங்களுக்கு அந்த நாட்டின் அரச விருந்தோம்பல் உறுதி. பாகிஸ்தானுக்காக வாதிட்ட ஒரு சிறந்த அமைதி துாதராக பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான நிஷான் - இ - பாகிஸ்தான் விருதை வழங்கி கவுரவித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
'பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் சித்தராமையா இந்தியாவை விட்டு வெளியேறி, பாகிஸ்தானுக்கு குடியேற வேண்டும்' என்று, பா.ஜ., தலைவர்கள் சிலர் விமர்சித்தனர்.
இதையடுத்து, தன் பேச்சால் ஏற்பட்ட நெருக்கடியை உணர்ந்து, சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், 'நாட்டின் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் யாராக இருந்தாலும், அவர்களை சும்மா விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
'பாகிஸ்தான் மீது போர் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே போர் நடக்கும் என்று தான் கூறினேன். எனது பேச்சை பா.ஜ., தலைவர்கள் திரித்து விட்டுள்ளனர்' என்றார்.
உளவுத்துறை தோல்வி
இதற்கிடையே, கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் திம்மாபூர் பாகல்கோட்டில் நேற்று அளித்த பேட்டி: துப்பாக்கியால் சுடும் போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டதாக கூறுகின்றனர். இது சாத்தியமா என்று தெரியவில்லை.
மத்திய உளவுத்துறையின் தோல்வியை மறைக்க, இதுபோன்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனரா என்று தெரியவில்லை. அனைத்தையும் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.