ADDED : அக் 15, 2024 01:48 AM
மும்பை, ஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், 66, கடந்த 12ம் தேதி இரவு மூன்று மர்ம நபர்களால் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடைக்கலம்
இந்த கொலை தொடர்பாக, ஹரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங், 23, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் ராஜேஷ் காஷ்யப், 19, ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிய ஷிவ்குமார் கவுதம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாபா சித்திக் கொலை தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, பிரவின் லோங்கர், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பிரவின் லோங்கரின் சகோதரர் சுபு லோங்கரை, புனேயில் நேற்று போலீசார் கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றதாக, சமூக வலைதளத்தில் சுபு லோங்கர் பதிவிட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற குர்மாயில் பல்ஜித் சிங், தரம்ராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோருக்கு, பிரவின் லோங்கர், சுபு லோங்கர் ஆகியோர் அடைக்கலம் கொடுத்ததாகவும் போலீசார் கூறினர்.
தலைமறைவாக உள்ள ஷிவ்குமார் கவுதமை தேடும் பணி முழு வீச்சில் நடப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
மகனுக்கு குறி?
மும்பை போலீசார் நேற்று கூறியதாவது:
பாபா சித்திக் உடன் சேர்ந்து, அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ஜீஷன் சித்திக்கையும் கொலை செய்ய கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கொலையில், குர்மாயில் பல்ஜித் சிங், தரம்ராஜ் ராஜேஷ் காஷ்யப், ஷிவ்குமார் கவுதம் ஆகியோரை தவிர, முகமது ஜாசின் அக்தர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது.
அவரையும், ஷிவ்குமார் கவுதமையும் தேடும் பணி நடக்கிறது. விரைவில் அவர்களையும் கைது செய்வோம். பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஒரேயொரு போலீஸ் கான்ஸ்டபிள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

