அரசியலை விட மாட்டார் சித்து அமைச்சர் போசராஜு நம்பிக்கை
அரசியலை விட மாட்டார் சித்து அமைச்சர் போசராஜு நம்பிக்கை
ADDED : டிச 09, 2024 06:47 AM

ராய்ச்சூர்: ''முதல்வர் சித்தராமையா, அரசியலை விட்டு விலக மாட்டார். தனக்கு 78 வயதானதால் அப்படி கூறியுள்ளார். அடுத்த முறை அவரது தலைமையில் தேர்தல் நடக்கும்,'' என சிறிய நிர்ப்பாசனத்துறை அமைச்சர் போசராஜு தெரிவித்தார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பதவி பகிர்வு விஷயம் அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. அரசியலை விட்டு முதல்வர் சித்தராமையா விலகமாட்டார். தனக்கு 78 வயதானதால், அரசியல் ஓய்வு குறித்து கூறியிருப்பார். அவரது தலைமையிலேயே அடுத்த தேர்தலும் நடக்கும்.
மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றுள்ளார். முதல்வர் மாற்றம் இல்லை என, ஏற்கனவே தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முதலில் தன் பதவியை தக்க வைத்து கொள்ளட்டும். இவரை லாயக்கற்ற தலைவர் என, பா.ஜ.,வின் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளனர். முதலில் தன் பிரச்னையை, அவர் சரி செய்து கொள்ளட்டும்.
முதல்வரை பற்றியும், காங்கிரசை பற்றியும் பேச, விஜயேந்திரா வெட்கப்பட வேண்டும். எங்கள் கட்சியில் முதல்வர் பதவிக்கு, யாரும் போட்டி போடவில்லை. பா.ஜ.,வில் ஆறு வாசல்கள் உள்ளன.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும் குளிர்கால சட்டசபை கூட்டத்தில் வட மாவட்டங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். பா.ஜ., ஒத்துழைப்பு அளித்தால், கூட்டம் சுமுகமாக நடக்கும்.
முடா வழக்கு குறித்து, நீதி விசாரணை நடக்கிறது. விசாரணையில் அனைத்தும் தெரியவரும். சி.பி.ஐ., பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா என, யாரிடம் வேண்டுமானாலும் அறிக்கை அளிக்கட்டும். 75 ஆண்டுகள் வரலாற்றில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையை, இந்த அளவுக்கு யாரும் துஷ்பிரயோகம் செய்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.