நபார்டு வங்கி கடனில் பற்றாக்குறை நிர்மலா சீதாராமனிடம் சித்து கோரிக்கை
நபார்டு வங்கி கடனில் பற்றாக்குறை நிர்மலா சீதாராமனிடம் சித்து கோரிக்கை
ADDED : நவ 22, 2024 07:31 AM

நபார்டு வங்கி கர்நாடகாவுக்கு வழங்கிய, கடனில் அநீதி ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார்.
மத்திய நிதி அமைச்சகத்திற்கு உட்பட்ட நபார்டு வங்கியில் இருந்து, மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் கடன் வழங்கப்படுகிறது.
கடந்த 2023 - 2024ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கியில் இருந்து, கர்நாடகாவுக்கு 5,600 கோடி ரூபாய் கிடைத்து இருந்தது.
ஆனால் 2024 - 2025 நிதி ஆண்டில் 2,340 கோடி ரூபாய் தான் கிடைத்து உள்ளது.
இந்நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் தயாரிக்கப்படும் நந்தினி பொருட்கள் விற்பனை டில்லியில் நேற்று துவங்கியது. முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, சித்தராமையா, அமைச்சர்கள் செலுவராயசாமி, பைரதி சுரேஷ், முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜு ஆகியோர் சந்தித்து பேசினர்.
கர்நாடகாவுக்கு நபார்டு வங்கியில் இருந்து, 2019 - 2020ம் நிதி ஆண்டில் 4,200 கோடி ரூபாய்; 2020 - 2021ல் 5,500 கோடி ரூபாய்; 2021 - 2022ல் 5,483 கோடி ரூபாய்; 2022 - 2023ம் நிதி ஆண்டில் 5,550 கோடி ரூபாய்; 2023 - 2024 ல் 5,600 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. 2024 - 2025 ல் 2,340 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது.
இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நபார்டு வங்கி வழங்கிய கடன் பற்றாக்குறை அநீதியை நீங்கள் சரிசெய்து, உரிய தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நிர்மலா சீதாராமனிடம், சித்தராமையா கேட்டு கொண்டார். பின், அவரிடம் கோரிக்கை கடிதம் கொடுத்தார்
. - நமது நிருபர் -