/
செய்திகள்
/
இந்தியா
/
தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்களுக்கு சித்து கடிதம்!: வரி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் என புகார் பெங்களூரில் கூடி ஆலோசிக்க வரும்படி அழைப்பு

ADDED : செப் 13, 2024 08:07 AM

பெங்களூரு: வரி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து பெங்களூரில் கூடி ஆலோசிக்க வரும்படி, தமிழகம் உட்பட எட்டு மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் இருந்து, மத்திய அரசுக்கு செலுத்தும் வரிகளில் இருந்து, மாநிலத்துக்கான பங்கு சரியான முறையில் வருவதில்லை என்று முதல்வர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
கடந்த மாதம் டில்லி சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தும், இதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
16வது நிதி கமிஷன்
சமீபத்தில் பெங்களூரு வந்த நிதி ஆயோக் மற்றும் 16வது நிதி கமிஷன் அதிகாரிகளிடமும், மத்திய அரசு வரி பங்கு தருவதில் பாரபட்சம் பார்ப்பதாக சித்த ராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய எட்டு மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று எழுதியுள்ள கடிதம்:
தற்போது, 16வது நிதி கமிஷன் தன் ஆலோசனையை துவக்கி உள்ளது. கர்நாடகாவுக்கு, ஆகஸ்ட் 29, 30 ஆகிய நாட்களில் 16வது நிதி கமிஷன் அதிகாரிகள் வந்தனர். அப்போது, அதிகமாக வரி பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களுக்கு, அதிகபட்ச பங்கீட்டை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு, நிதி பங்கை குறைப்பதால், நல திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில், கடும் பிரச்னை ஏற்படுகிறது என்றும் வலியுறுத்தினேன்.
அதிகமான வரி செலுத்தும் மாநில மக்கள், நியாயமான முறையில் மீண்டும் தங்களுக்கு பலன்கள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவே, நிதி கமிஷன் சம பங்கு நிதியை திரும்பி தர வேண்டும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த வரி வருவாய் பங்களிப்பு, நாட்டை கட்டமைக்க உதவுகிறது. எனவே, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒரு வலுவான கூட்டாட்சிக்கு சமபங்குடன் செயல்படுவது அவசியம்.
தனி அழைப்பு
இந்த பிரச்னைகள் குறித்து, மேலும் விவாதிக்க பெங்களூரில் நடைபெறும் மாநாட்டிற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநாட்டு விபரம் உறுதி செய்த பின், தேதியை குறிப்பிட்டு தனி அழைப்பை அனுப்புவேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தராமையாவின் இந்த முயற்சிக்கு, எத்தனை மாநில முதல்வர்கள் கைகொடுப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.