'கன்னடத்தில் கையொப்பம் போடுங்கள்' பைக்கில் சென்று ஆசிரியர் விழிப்புணர்வு
'கன்னடத்தில் கையொப்பம் போடுங்கள்' பைக்கில் சென்று ஆசிரியர் விழிப்புணர்வு
ADDED : டிச 07, 2024 11:06 PM

கையெழுத்து தான், ஒருவரின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்று சொல்வர். சிலரது கையெழுத்து பார்க்கும்போது அப்படியே கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் என்பது போல அழகாக இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க ஆவணங்கள், படிவங்களில் கையெழுத்துப் போடுவோர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கையொப்பமிடுகின்றனர். ஒரு சிலர் மட்டும்தான் தங்களது தாய் மொழியில் கையொப்பம் போடுகின்றனர்.
வலியுறுத்தல்
இந்நிலையில் ஒரு கன்னட ஆசிரியர், கன்னடத்தில் தான் கையொப்பம் போட வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக, பைக்கில் ஊர், ஊராக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஷிவமொக்காவின் ரிப்பன்பேட் அருகே உள்ள தலாலே கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர் போஜப்பா. இவர், தன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் படிவங்கள், ஆவணங்களில் கையெழுத்து வாங்கும்போது கண்டிப்பாக கன்னடத்தில் கையெழுத்து போடுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து போஜப்பா கூறியதாவது:
அனைவரும் அவர்களின் தாய் மொழியை நேசிக்க வேண்டும் என்பது என் விருப்பம். மேல்நாட்டு மோகத்தால் கையெழுத்தைக் கூட ஆங்கிலத்தில் போடுகின்றனர். தாய்மொழியில் கையெழுத்துப் போட்டால் நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பர் என்று யோசிக்கின்றனர்.
தாய் மொழியில் தான் பேச வேண்டும். தாய் மொழியில் தான் கையொப்பம் இடவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதுகுறித்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
ஒரு நாளைக்கு தினமும் நான்கு மணி நேரம் ஒதுக்கி, கன்னடத்தில் கையொப்பம் போட வேண்டும் என ஊர், ஊராக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
குறிப்பாக கிராம பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., துாரம் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரையும் கன்னட வழி பள்ளியில் சேர்த்துள்ளேன். தாய் மொழியை மதிக்க கற்றுக் கொண்டால் எங்கு சென்றாலும் நமக்கு சிறப்பு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
போஜப்பாவின் முயற்சிக்கு பல்வேறு கிராம மக்களும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்
- நமது நிருபர் -.