புகார் தரணும் அல்லது மன்னிப்பு கேட்கணும்: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு
புகார் தரணும் அல்லது மன்னிப்பு கேட்கணும்: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு
UPDATED : ஆக 09, 2025 04:44 AM
ADDED : ஆக 08, 2025 06:34 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருந்தால் ராகுல் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும். இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நேற்று நிருபர்களை சந்தித்த ராகுல், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம். எங்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தேர்தல் கமிஷன் தவிர்க்கிறது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை நாங்கள் கேட்டு வருகிறோம்; இதுவரை தேர்தல் கமிஷன் அளிக்கவில்லை. தேர்தலில் முறைகேடு செய்ய, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. அக்கட்சி உடன் சேர்ந்து ஓட்டுகளை திருடுகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனையும் மறுத்த தேர்தல் கமிஷன், ராகுலின் குற்றச்சாட்டுகள் தவறானது. மக்களை தவறாக வழிநடத்துகிறது எனத் தெரிவித்து இருந்தது. கர்நாடகா, மஹாராஷ்டிரா,உபி உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகளும் அதனை மறுத்தனர். மேலும் ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதத்தில், 'வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க, இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரகடனம் அல்லது சத்திய பிரமாணத்தில் கையொப்பமிட்டு கர்நாடக தலைமை தேர்தல் கமிஷனரிடம் மாலைக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். குற்றச்சாட்டில் உறுதியுடன் இல்லை எனில் இனியாவது பொய் சொல்லி மக்களை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பழைய கதையையே ராகுல் கூறியுள்ளார் 2018 ல் ம.பி., மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கமல்நாத்தும், தற்போது ராகுலும் ஒரே விஷயத்தை திரும்ப சொல்கின்றனர்.
கடந்த 2018 ல் தனியார் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு, வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளது. அதில், 36 வாக்காளர்களுக்கு ஒரே நபரின் புகைப்படம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழிநடத்த முயன்றனர். ஆனால், உண்மையில் 4 மாதங்களுக்கு முன்பே அந்த தவறு சரி செய்யப்பட்டு, அதன் நகல்கள் கட்சிக்கு அனுப்பப்பட்டது. இதனால், கமல்நாத்தின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
தற்போது 2025ம் ஆண்டு, அதேபோன்ற நடைமுறையை இப்போது நீதிமன்றத்தில் செய்ய முடியாது என்பதால், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றனர். 3 மாநிலங்களில் ஒரே நபரின் பெயர் உள்ளதாக கூறிய குற்றச்சாட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தீர்வு காணப்பட்டு விட்டது.
கமல்நாத் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பிரச்னையை எழுப்புவது, சுப்ரீம் கோர்ட் முடிவை ராகுல் மதிக்காததை காட்டுகிறது. வாக்காளர் பட்டியலுக்கு ஆட்சேபனை செய்வதிலும் முறையீடுவதிலும் சட்டத்தில் இடம் உள்ளது. சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், மீடியாக்கள் முன்பு பேசி விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்.
தேர்தல் கமிஷன் மீதான தனது கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் ராகுலுக்கு நம்பிக்கையிருந்தால், சட்டத்தை மதிப்பு, சத்திய பிரமாணத்தில் கையெழுத்துபோட வேண்டும். அந்த சத்திய பிரமாணத்தில் கையெழுத்து போடவில்லை என்றால், தனது குற்றச்சாட்டுகள் அவர் நம்பவில்லை என்று அர்த்தம். அபத்தமான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பிய விஷயம் உண்மை என நம்பினால், சத்திய பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும். அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
போலி அட்டையை கொடுக்க வேண்டும்
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக நிருபர்களை சந்தித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி வாக்காளர் அடையாள அட்டை ஒன்றை காண்பித்தார். அது போலி எனத் தெரிவித்து இருந்த தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு இருந்தது.
இந்நிலையில் மாநில தேர்தல் அதிகாரி தேஜஸ்விக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் காட்டிய வாக்காளர் அடையாள அட்டை போலி என தெரிய வருகிறது. போலி அரசு ஆவணத்தை பயன்படுத்துவது சட்டவிரோதம். எனவே போலியான அந்த அட்டையை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.