அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கமா?: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்
அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கமா?: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்
ADDED : ஆக 31, 2025 01:46 AM

பெங்களூரு:''துணை ஜனாதிபதி தேர்தல் என்பது அரசியல் விவகாரம். அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது ஏன்?,'' என, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ஜ.,வின் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து 'இண்டி' கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் நக்சல் ஆதரவாளர் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார்.
இதற்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் துவங்கினர்.
நல்லதல்ல இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று வழக்கறிஞர்கள் கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.
இது நல்லதல்ல. துணை ஜனாதிபதி தேர்தல் என்பது அரசியல் விவகாரம். இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை.
அப்படி அவர்கள் தலையிடுவதால், நீதிபதி யாக பணியில் இருந்தபோது ஏதோ ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவர்கள் இருந்தனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவதும், கடிதம் எழுதுவதும் சரியானது அல்ல.
ராகுலாக இருந்தாலும் சரி; மஹுவா மொய்த்ராவாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் அநாகரிக மான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
பிரதமரையும், காலஞ்சென்ற அவரது தாயாரையும் அவதுாறாக பேசுவது, தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
நியாயமல்ல மக்கள் ஓட்டளிக்காத நிலையில், தேர்தல் கமிஷனை குறைகூறுவது எந்தவிதத்திலும் நியாயமல்ல.
வரிசையாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்து விட்டதால், ராகுலின் கோபம் தற்போது எல்லைமீறி சென்றுவிட்டது. அவருக்கு நம் நாட்டை ஆள, மக்கள் மீண்டும் வாய்ப்பு தர மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.